Tuesday, 28 January 2014

விழிமாறிய பாதையும் - வழிமாறிய சுவடுகளும்


ஒரு குடும்ப தலைவன் தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது - இடையிடையே காறி உமிழ்வதும் , பேச்சை தொடர்வதுமாக இருந்தால் , அதை கண்டு வளரும் மகனும் அப்படியே - அந்த கலாச்சாரத்திலேயே வளர்வான். 

கருணாநிதியின் மேடைப் பேச்சு கலாச்சாரம் அப்படித்தான் இருக்கும். கவர்ச்சியாக பேசுவதும் - கண்ணியமற்ற முறையில் பிறரை வசைபாடுவதும்தான் அவரது மேடை பேச்சுப் பேச்சு கலாச்சாரம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதுரையில் திமுகவினரால் தாக்கப்பட்ட பிறகு நடந்த வேலூர் மாநாட்டில் துரை முருகன் - கருணாநிதி போன்றோரின் பேச்சுக்கள் இதற்கு சான்று.

கருணாநிதியும் - அவரது இரு மகன்களும் செய்யும் அறிக்கை யுத்தம் அப்படித்தான் இருக்கின்றன. கருணாநிதியின் (அழகிரியும் - ஸ்டாலினும்)   இரு புதல்வர்களும் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு சிறிதும் தகுதிப் படைத்தவர்கள் அல்ல !

தலைமை பண்பும் - சீர்திருத்த கொள்கைகளும் - இலக்கை நோக்கிய செயல் ஆற்றல் கொண்ட தலைவர்களான சுபாஷ் சந்திரபோஷ் - மகாத்மா காந்தி போன்ற தேசிய தலைவர்கள் , தங்கள் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் ஆற்றலும் - கொள்கைகளிலிருந்து பிறழாமல் தேசத்தை வழி நடத்தி செல்லும் கண்ணியமும் பெற்றிருந்தார்கள்.

தலைமை ஏற்கும் பண்போ - தொண்டர்களை இலக்கை நோக்கி ஒருங்கிணைக்கும் ஆற்றலோ - ஒரு மைய கருத்தை சார்ந்த பரப்புரை செய்யும் பேச்சாற்றலோ அமைய பெற்றிராதவர்கள்தான் அழகிரியும் - ஸ்டாலினும்.  அவர்களிடம் அப்படி ஒரு தலைமை ஏற்று நடத்தும் வடிவமைப்பு ஆற்றல் இல்லாதது ஆச்சரியமல்ல. அவர்கள் அவ்வாறு வடிவாற்றலில் வார்க்கப்படவில்லை.

பகுத்தறிவு - கடவுள் மறுப்புக் கொள்கை - சமூக நீதி சார்ந்த சீர்திருத்தம் - பெண் முன்னேற்றம் என்பது போன்ற சமகால சமூகவியல் தேவைகளை உரிய காலத்தில் அடைவதற்காக திமுக அரசியலில் பங்கெடுப்பதாக அறிவித்தாலும் , கருணாநிதியின் சிந்தனையும் - செயலும் அவ்வாறு அமையவில்லை.
கருணாநிதியின் அறமற்ற அரசியல் போக்கும் - கண்ணியமற்ற நோக்கங்களும் கண்டுதான் அன்று ஈ வி கே சம்பத் போன்றவர்கள் தி மு க விலிருந்து வெளியேறினார்கள்.    
சுய வடிவமைப்பு இல்லாத இலக்குகளும் - கண்ணியமற்ற கொள்கைகளும் கொண்ட கட்சியாக தி மு க இருப்பதினால்தான் அந்த கட்சியை தேர்தலில் காப்பாற்ற  நடிகை குஷ்புவும் - நடிகர் விஜயகாந்தும் தேவைப்படுகிறார்கள் .

சென்னையில் உள்ள திமுகவினர் கூட எளிதில் அணுக முடியாதவர்தான் ஸ்டாலின். தொண்டர்களோடு நேரிடையாக பழகி கருத்தறியும் உத்தி ஸ்டாலினிடம் இல்லை. அதனால்தான் சென்னையை கடந்து அவரால் பெரும்பான்மை பெற முடியவில்லை.

மிக எளிதாக தொண்டர்களோடு பழகும் அழகிரியை சுற்றி இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் குற்றபிண்ணனி உள்ளவர்கள். தங்கள் குற்ற வழக்குகளிலிருந்து தப்பவும் - பயம் கலந்த செல்வாக்கினால் பணம் பறிப்பதுமான கும்பல்களோடுதான் அழகிரியின் மதுரை வட்டாரம் உள்ளது.

திமுக ஒரு உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சியாக இருந்தால் துரைமுருகன் - பேராசிரியர் அன்பழகன் போன்ற இரண்டாம் கட்ட திமுக தலைவர்களின் வாரிசுகளும் தலைமைக்கு போட்டியிடலாமே ?

பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் கட்சி தலைவர்கள் , தேர்தல் முறை மூலம் ஆட்சியை கைப்பற்றும் பாதுகாப்பில்லாத ஜனநாயகமாகத்தான் தற்போது நடைமுறை உள்ளது. பாதுகாப்பான ஜனநாயகத்திற்கு வழிநடத்தலும் / அர்ப்பணிப்பு உணர்வோடும் கொண்ட தலைவர்களும் , திறமையான - நேர்மையான இளைஞர்களும் தேவை.

தமிழக மாணவர் கழகம் அந்த குறிக்கோளோடு தன் சமூக - அரசியல் பயணத்தை தொடர்கிறது.

அவனி மாடசாமி - தலைவர்

தமிழக மாணவர் கழகம்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய  tamilagamtimes@post.com     

   

Saturday, 25 January 2014

இந்தியாவின் கிராம நிர்வாகம் - அரசியல் கட்டமைப்பு - தொழில், வணிகம்...

மகாத்மா காந்தியின் கிராம ராஜ்யம் குறித்து நான் அறிந்தவைகளை உங்களோடு பகிர்ந்த கொள்ள விரும்புகிறேன்.

சாதாரணமாக நம்மில் பெரும்பாலானவர்கள் காந்தியின் கிராமசுயராஜ்யத்தைப்பற்றிக் கேள்விப்படும்போது ‘என்ன, முட்டாள்தனமால்ல இருக்கு?’ என்றுதான் எண்ணிக்கொள்வோம். கிராம சுயராஜ்யத்தின் சாத்தியங்களைப்பற்றி பேசுவதற்கு முன்பாக இந்த மனநிலை ஏன் உருவாகிறது என்றே நாம் யோசிக்க வேண்டும். அந்த மனநிலைதான் கிராம சுயராஜ்யத்திற்கு முக்கியமான எதிர்சக்தி.



நாம் இப்போது உலகமெங்கும் உருவாக்கி வைத்துள்ள அமைப்புதான் சாத்தியமான மிகச்சிறந்த அமைப்பு என்றும் இதில் பல பிரச்சினைகள் இருந்தாலும் பெரும்பாலும் எல்லாம் சரியாக இருக்கின்றன என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பைச் சார்ந்த கல்வியே நமக்கு வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின் நிறுவனங்களில் நாம் வேலைசெய்கிறோம். இந்த அமைப்பை நம்பியே நம் குழந்தைகளை வளர்க்கிறோம். ஆகவே என்பது நமக்கு கையில் இருக்கும் அனைத்தையும் கைவிட்டுவிட்டு முற்றிலும் புதிய ஓர் இடத்துக்குச் செல்வது என்றே பொருள்படுகிறது. அது நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

ஒநாய்களும் - ஆட்டு குட்டியும்


2 ஜி வழக்கின் முக்கிய குற்றவாளிகள் கருணாநிதியும் - ராஜாத்தி அம்மாளும்தான். ஆனால், இவர்கள் சட்டத்தின் படி குற்றவாளிகள் இல்லை. பின் எந்த அடிப்படையில் இவர்கள் குற்றவாளிகள் என கூறுவது என்றால் தர்க்க ரீதியான அறம் என்ற அடிப்படையில்தான். ( LOGICAL ETHICS ).

இந்திய நீதிமன்றங்கள், சட்ட விதிகள் பதிவு செய்யப்பட்ட ஒரு கணினி போலத்தான் செயல்படுகின்றன. அவ்வாறுதான் செயல்பட இயலும். தனக்குள்ளே என்ன பதிவு செய்யப்பட்டதோ அதன் அடிப்படையில் மட்டுமே ஒரு கணினி இயங்கும். அதே போல்தான் இந்திய நீதிமன்றங்களும்.
இந்திய சட்ட விதிகளின் ஆராய்ந்தால் குற்றமும் சாட்சியமும் மட்டுமே புலப்படும். ஆனால் தர்க்க ரீதியான தர்மப்படி சிந்தித்தால் ( LOGICAL ETHICS ) நீதியின் முழு பரிணாமம் புரியும். 2 ஜி வழக்கிலும் தர்க்க தர்மப்படி குற்றவாளிகள் கருணாநிதியும் - ராஜாத்தி அம்மாளும்தான்.

உதாரணமாக , சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் பிரபல உணவு விடுதியின் உரிமையாளர் மீது ஒரு பெண் பாலியல் குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு வரி குறிப்பிட்டிருந்தார். " ... இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிகழ்ந்த நிகழ்வுகளுக்கும் - அந்த பெண்ணின் மீது இழைக்கப்பட்ட பாலியல் தொந்தரவுகளுக்கும் - அந்த பெண்ணின் தாயும் ஒரு காரணமாக உள்ளார் - அந்த தாயின் தவறான வழிகாட்டுதலினால் இந்த பெண் இத்தனை துன்பங்களையும் அடைந்துள்ளார்...." என்று குறிப்பிட்டுள்ளார். சட்டபடி அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயை தண்டிக்க இயலாது. ஆனால் நீதிபதி எந்த அடிப்படையில் அந்த குறிப்பிட்டார் என சிந்தியுங்கள் நண்பர்களே !

அதே போல்தான் 2 ஜி வழக்கில் கனிமொழி சிக்கியுள்ளார். மனைவி - துணைவி என்ற குடும்பங்களை கொண்டிருக்கும் தனிநபர் ஒழுக்கமில்லாத ஒரு மனிதன் , தன் இரு குடும்பங்களுக்குமான தன் பொருளாதார பங்களிப்பை நிறை செய்யும் பொருட்டு செய்த செயல்தான் இத்தனை சீரழிவுக்கும் காரணம். தனது அறமற்ற ஆசைகளினால் ராஜாத்தி அம்மாள் தனது மகளை வழக்கில் சிக்க வைத்துள்ளார்.

இந்தியாவின் பெரும் அரசியல் பலமும் - நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ஒரு தலைவரின் குடும்ப உறுப்பினர் நடத்தும் தொலைக்காட்சிக்கு எப்படி பணம் வந்தது - எந்த அடிப்படையில் / யார் உதவி செய்தார்கள் என்பதனை அந்த கும்ப தலைவர் அறியாதிருப்பாரா ? கனிமொழியின் தாய்க்கும் இது தெரியாதா ?

அறமற்ற சிந்தனை கொண்ட அரசியல் தலைவர் - பண ஆசை கொண்ட துணைவி - தந்திரமான / நேர்மையற்ற வணிகர்கள் இவர்களின் கூட்டு சிந்தனையின் உருவம்தான் 2 ஜி வழக்கு.

அரசியல் மைய அதிகாரம் கொண்ட தலைவர்களின் தனிநபர் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம், தங்களது நேர்மையற்ற வணிக தேவைகளை நிறைவேற்றும் மலிவான உத்தி கொண்ட வணிகர்கள் கூட்டம், நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தான விசயம்.

இவ்வாறு கனிமொழின் மீது வழக்கு தொடர்ந்ததால், இவர்களுடைய கூட்டணியில் உள்ள மத்திய அரசு இவர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக இதே தலைவர் தனது கட்சியின் பொது குழுவில் தீர்மானம் இயற்றுகிறார். முதலில் 'துரோகம்' - 'சாணக்கியம்' - 'பகுத்தறிவு' இந்த அவார்த்தைகளுக்கெல்லாம் கருணாநிதியின் அகராதியில் என்ன பொருள் என அவரே விளக்கட்டும்.

ஆக, தனிநபர் ஒழுக்கமில்லாத தந்தையும் - பேராசை கொண்ட தாயும் செய்த வினையினால் மகள் வழக்கில் சிக்கியுள்ளார் என்பதே தர்க்க ரீதியான உண்மை. ஓநாய்களின் தந்திரத்திற்கு ஒரு ஆட்டு குட்டி பலியாகியிருப்பது பரிதாபம்தான்.

தனிநபர் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு பயனில்லாத இந்த அரசியல் குடும்ப மையங்கள் அரசியலில் தொடர்வது நமது ஜனநாயக அமைப்பிற்கு உகந்ததா ? சிந்தியுங்கள் நண்பர்களே !

நன்றி.

அவனி மாடசாமி - தலைவர்

தமிழக மாணவர் கழகம் - tamilagamtimes@post.com

knowledgeocean2014.blogspot.com / www.tamilagamtimes.com

உட்கட்சி ஜனநாயகமும் - உடல் உறுப்புகளும்

அடிக்கடி தொலைக்காட்சிகளிலும் - செய்தி தாள்களிலும் அரசியல் தலைவர்களும் குறிப்பிடும் ஒரு வார்த்தை ' உட்கட்சி ஜனநாயகம் '. அவரவர் கட்சிகளில் தாம் பின்பற்றுவதாகவும் , மற்ற கட்சிகளில் அது இல்லை என்றும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டுவதையும் காணலாம்.
சரி உட்கட்சி ஜனநாயகம் இருப்பதால் பொது மக்களுக்கு என்ன பயன் ? அது இல்லாவிட்டால் நமக்கு என்ன ? என தோன்றும்.

உதாரணமாக, நம் உடலிலுள்ள பாகங்கள் அதனதன் வேலையை , அதனதன் இடத்திலிருந்து கொண்டு செயலாற்றினால் நம் உடல் ஆரோக்கியமாக இயங்கும். மாறாக , நம் உடல் பாகங்களுக்கு கெடுதல் செய்யும் உணவையோ - திரவங்களையோ உட்கொண்டால், உறுப்புகளின் ஒருங்கிணைந்த ஆற்றல் கிட்டாமல் உடல் ஆரோக்கியம் கெடும்.

ஆரோக்கியம் இல்லாத உடலால் - குறிக்கோளோடு இயங்கும் சிந்தனைக்கு ஒத்துழைக்க இயலாது. ஒருங்கிணைந்த உடல் ஆற்றல் இல்லாத ஒருவரால் பயனுடைய இலக்கை அடையும் உழைப்பு திறன் அளிக்க இயலாது. இதை உடலுறுப்பு ஜனநாயகம் என்று கூட வைத்து கொள்ளலாம்.

அதைப் போன்றதுதான் ஒரு கட்சியை நிர்வகிக்கும் குழுவில் உள்ளவர்கள் அவரவர் திறனுக்கும் - அனுபவ ஞானத்திற்கும் உரிய பதவி நிலைகளை அடைவது. பிழையான பிரதிநிதித்துவ கட்டமைப்பு கொண்ட கட்சியில் , கொள்கை குறிக்கோளுடன் இலக்கை அடையும் திறன் இல்லாமல் , வெறும் மேடைப் பேச்சு பிரசங்கங்களும் - மலிவான தேர்தல் வெற்றி உத்திகளும் கொண்டுதான் கட்சி நடத்த இயலும்.

அரசியல் கட்சிகளால் இயங்கும் நம் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பிற்கு - உட்கட்சி ஜனநாயகம் அற்ற ஆரோக்கியமில்லாத கட்சிகளால் நிர்வகிக்கப்படும்போது ஆபத்து ஏற்படுமல்லவா ? ஆபத்தான ஜனநாயக முறையில் இயங்கும் ஒரு தேசத்தினால் முறையான முன்னேற்றம் எட்ட இயலாது.

பிழையற்ற பிரதிநிதித்துவமும் - உட்கட்சி ஜனநாயகமும் உடைய இயக்கங்களை ஜனநாயக கட்டமைப்புக்கு அழைப்பது நம் கடமை அல்லவா?

நண்பர்களே தொடர்ந்து சிந்திப்போம்.


அவனி மாடசாமி - தலைவர்

தமிழக மாணவர் கழகம்

tamilagamtimes@post.com
www.tamilagamtimes.com

இந்திய அயலுறவு கொள்கையும் - தேவயானி விவகாரமும்


 
தமிழக மீனவர்களும் - தேவயானியும் இந்திய அரசியல் சட்டத்திற்கு முன்னால் ஒன்றா ? இல்லை என்பதுதான் யதார்த்தம்.

இந்திய அயலுறவு கொள்கையும் - தேவயானி விவகாரமும்

தமிழக மீனவர்களும் - தேவயானியும் இந்திய அரசியல் சட்டத்திற்கு முன்னால் ஒன்றா ? இல்லை என்பதுதான் யதார்த்தம்.

நிகழ்வுகளை உற்று நோக்கும் தன்மையும் - உள் வாங்கி கிரகிக்கும் திறனும் - தொலைநோக்கு சிந்தனை கொண்ட செயல் ஆற்றலும் - தரமான பல்கலைகழக படிப்பும் கொண்ட , நிர்வாகவியல் பயிற்சியும் பெற்ற அதிகாரிகள்தான் நமது நாட்டின் தூதர்களாக வெளிநாடுகளில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

நமது நாட்டினை சார்ந்த அரசு அதிகாரிகளோ - அரசியல் தலைவர்களோ - குடிமகனோ வெளிநாட்டில் அவமானப்படுத்தப்பட்டால் நாம் நம் கண்டன குரல்களை பதிவு செய்ய வேண்டும். ஆனால் , கண்டன குரல்களை பதிவு செய்வதில் கூட நம்மிடம் தேசிய ஒருமைப்பாடு இல்லை என்பதுதான் வேதனையான விசயம்.
தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும்போது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தினால், மீனவர்கள் நம் கடல் எல்லையை கடந்து இலங்கையின் கடல் எல்லைக்கு சென்றதால் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதாக நம் அரசு அதிகாரிகளே வாக்குமூலம் தருகிறார்கள். அவ்வாறு இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதாக நம் அரசியல் தலைவர்களும் அறிக்கை விடுகிறார்கள்.

ஒரு நாட்டின் பூகோள எல்லையை கடந்தவர்களுக்கு இராணுவ தாக்குதல் சரி என்றால், அமெரிக்காவின் சட்ட திட்டங்களை பின்பற்றவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய அரசு தூதரக அதிகாரிக்கு எதிராக அமெரிக்க அரசு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வதே தவறு - அவமானம் என வாதிடுவது தர்க்க ரீதியாக நியாயமா ? இந்திய மத்திய அமைச்சர்கள் ஒரு வாதத்திற்காக கூட இந்திய தூதரக அதிகாரி தேவயானி என்ன தவறு இழைத்தார் என விசாரிப்போம் என கூறவில்லை.

அதற்கும் மேலாக நம் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சலுகைகளை பறிப்பது போன்ற அரசியல் நிர்வாக முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இது போன்ற முதிர்ச்சியற்ற செயல்களால் நம் அயலுறவுகள் மேலும் பாதிக்கும் என்பது கூட நமது அரசியலாளர்களுக்கு புரியவில்லை. அமெரிக்கா தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி கொள்ள இன்னும் தீவிரமாக முயலும் என்பதுதான் நடைமுறை உண்மை.

அமெரிக்காவின் வல்லரசு கொள்கைகளை நாம் விமர்சிப்பது வேறு - தேவயானி விவகாரம் என்பது வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் முதிர்ச்சியற்ற தலைவர்கள்தான் இன்னும் நம்மை ஆள வேண்டுமா ? தொடர்ந்து சிந்திப்போம்.

அவனி மாடசாமி - தலைவர்

தமிழக மாணவர் கழகம் - tamilagamtimes@post.com
www.tamilagaamtimes.com
http://www.tamilagaamtimes.com/

விவேகானந்தரும் - இந்திய ஞான மார்க்க சிந்தனை தாக்கமும்



இந்திய ஞான வழி தோன்றல்கள் எல்லாம் சமூக சிந்தனை சார்ந்த அறநெறிக்கொள்கைகள் மூலம் பரப்புரை செய்யப்பட்டதாக அறிகிறேன். இந்திய ஞான மரபு சிந்தனைகளில் விவேகானந்தரின் ஞான உரைகள் எல்லாம் இந்து மதம் சார்புடையதாகவே புரிந்துக் கொள்ளபடுகின்றன. விவேகானந்தரின் கூற்றை நான் என் பார்வயில் தங்களோடு பகிர்ந்து கொள்வதில் பிரியம் கொள்கிறேன் நண்பர்களே !

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன், சற்று இதைப்பற்றி யோசித்தீர்கள் என்றால் நான் சொல்ல வருவது என்ன என்பது புரியவரும்.

இந்து மதத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. நாட்டார் பண்பாடு சார்ந்த வழிபாடுகள் மற்றும் சடங்குகளின் மரபு, பெருமதம் சார்ந்த பக்திமரபு அல்லது கர்ம மரபு, தத்துவமும் யோகமும் அடங்கிய ஞான மரபு.

இவற்றில் எதைக் கடைப்பிடித்தாலும் அவரவர் தளத்தில் அது பயனுள்ளதே. இவற்றைப் புரிந்துகொள்ள முயல்வோம் என்றால் குழப்பங்கள் இல்லாமல் தனித்தனியாக வரலாற்று நோக்கில் புரிந்துகொள்வதே சிறந்த வழி. ஒன்றை இன்னொன்றைக்கொண்டு புரிந்துகொள்ள முயல்வது நிறைய சிக்கல்களை உருவாக்கும்.

உதாரணமாக நாட்டார் மரபு சார்ந்த ஒரு சடங்குக்கு பக்தி மரபின் நம்பிக்கைகள் சார்ந்து விளக்கம் கொடுப்பது அதைத் திரிப்பதாகவோ அல்லது எளிமைப்படுத்துவதாகவோதான் ஆகும்.

அதைப்போல ஞானமரபு சார்ந்த ஒரு தத்துவத்தை அல்லது யோகமுறையை பக்தி மரபுக்குள் கொண்டுவந்து நிறுத்திப் புரிந்துகொள்வதும் திரிபுகளையும் எளிமைப்படுத்தல்களையும் உருவாக்கும்.

நெடுங்காலமாக நமக்குத் தத்துவ-யோக மரபை பக்திமதச்சூழலுக்குள் கொண்டுவந்து நிறுத்தி விளக்கும் ஒரு வழக்கம் இருந்து வந்துள்ளது. அதைத் தவிர்க்கமுடியாது. ஏனென்றால் அப்படித்தான் தத்துவத்தையோ யோகத்தையோ பெரும்பாலானவர்கள் அறிமுகம் செய்துகொள்கிறார்கள்.

பெரும்பாலும் இந்த அறிமுகமானது மேடைப்பேச்சுகள், கதா காலட்சேபங்கள், பக்திக் கட்டுரைகள் ஆகியவை வழியாக நிகழ்கிறது. அந்த வெளிப்பாட்டுமுறைகளுக்கென்றே சில மேலோட்டமான வழிமுறைகள் உள்ளன.

அப்படித் தத்துவத்தையும் யோகத்தையும் அறிமுகம் செய்யும்போது இன்றியமையாமல் ஓர் எளிமைப்படுத்தல் நிகழ்ந்துவிடுகிறது. எந்த சிக்கலான நூலையும் மிக மிக எளிமைப்படுத்தி ஓரிரு சொற்களில் ‘மொத்தத்திலே இவ்வளவுதான்யா விஷயம்’ என ஒருவர் ஓங்கிச் சொல்வதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் அது எளிதாக இருக்கிறது. உழைப்பைக் கோருவதில்லை. அந்த மக்களால் அவர் தெளிவாகப் புரிந்துகொண்டவர் என நம்பப்படுகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள மேடைப்பேச்சு மரபு வீச்சு மிக்கது. நம் சிந்தனை முறை பெரும்பாலும் எழுத்து-வாசிப்பை நம்பி உருவாகவில்லை. பேச்சு-கேட்பை நம்பியே உருவாகியிருக்கின்றது. மேடைப்பேச்சின் இந்த வழிமுறை நம்மை நூல்களுக்குள் ஆழமாகச் செல்லமுடியாதவர்களாக ஆக்குகிறது. சிக்கலான விஷயங்களைக் கவனிக்க முடியாதவர்களாக வடிவமைக்கிறது.

எந்த ஒரு விஷயத்தையும் சுருக்கமாக, ஓரிரு சொற்களில், மிக எளிமையாகச் சொல்லியாகவேண்டும் என்ற கட்டாயம் உருவாகி விடுகிறது. பெரும்பாலும் நுட்பமான, ஆழமான விஷயங்களை அப்படிச் சொல்லமுடிவதில்லை. அந்நிலையில் அவற்றைத் தவறாக எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளும் போக்கும் உருவாகிறது.

அறிமுக நிலையில் பலவற்றை எளிமையாகப் புரிந்துகொள்வது தவிர்க்கமுடியாதது. ஆனால் இந்த செவிவழிக் கல்வி பொதுப்போக்காக ஆகும்போது என்னாகிறதென்றால் எல்லா விஷயங்களைப் பற்றியும் ‘நெத்தியடி’யாகச் சொல்லப்பட்ட ஒற்றைவரிகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு எங்கும் அவற்றைச் சொல்பவர்கள் அதிகரிக்கிறார்கள். அவர்கள் மேலே எதுவும் தெரிந்துகொள்ளமுடியாத மன அமைப்புக் கொண்டவர்களாக ஆகிறார்கள். அவர்களின் பேச்சுக்களால் பிறரும் எதையும் தெரிந்துகொள்ள முடியாதவர்களாகிறார்கள்.

சிந்தனைகளைப் புரிந்துகொள்ளக் குறுக்கு வழி ஏதுமில்லை. சிந்தனைகள் எப்போதுமே சிக்கலான வடிவில்தான் இருக்கும். எந்த ஒரு சிந்தனைக்கும் முன்னும் பின்னும் தொடர்ச்சி இருக்கும். அது ஒரு பெரிய ஒட்டுமொத்தப் பரப்பில் பொருத்தப்பட்டிருக்கும். அதைவிட முக்கியம் என்னவென்றால் எந்த சிந்தனையும் ஓரு முரணியக்கத்தில் இருக்கும். அதாவது அதை மறுத்தும், தாண்டியும் செல்லும் இன்னொரு சிந்தனையுடன் பிரிக்கமுடியாதபடி இணைந்தே அது இருக்கும்.

சிந்தனைகளை அவ்வாறு ஒட்டுமொத்தமாக, முழுமையாகப் புரிந்து கொள்வது என்பது தொடர் முயற்சி மூலம்தான் நிகழ முடியும். அதற்கான உழைப்பையும் கவனத்தையும் கொடுத்தாகவேண்டும். சுருக்கிப் புரிந்துகொள்ளுதல் என்பது சிந்தனைகளைக் கற்றுக்கொள்வதற்கு நேர் எதிரான வழி. ஆகவே சுருக்கிப் புரிந்துகொள்ள முயலாதீர்கள். ஒரு மூலச்சிந்தனையைச் சுருக்கிச் சில சொற்களில் சொல்கிறேன் என ஒருவர் சொன்னார் என்றால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆனால் நினைவில் நிறுத்துவதற்காக ஒரு சிந்தனையின் சாரத்தைச் சில சொற்களில் சுருக்கிக்கொள்ளும் வழக்கம் நம்மிடம் உண்டு. அதன் நோக்கம் அச்சிந்தனையைச் ‘சொல்வது’ அல்ல. அச்சிந்தனையை ‘நினைவுறுத்துவது’ மட்டுமே. அச்சொற்களை மீளமீள மனதில் ஓட்டிக்கொள்வதன் வழியாக ஏற்கனவே கசடறக் கற்ற அச்சிந்தனையை விரிவாக்கிக்கொள்ள முடியும்.

பகவத்கீதை சொல்வது கூட கருத்துக்களின் ஒரு வளர்ச்சிப்போக்கை. ஒன்றை இன்னொன்று நிராகரித்துச் செல்லும் முரணியக்கத்தை. அது ஒரு ‘முடிவை’ நோக்கிச் செல்லவோ இறுதியாக ‘ஒன்றை’ச் சொல்லி நிற்கவோ இல்லை. அந்தப் போக்கில் எல்லா கருத்துப்புள்ளிகளுமே முக்கியமானவைதான்.

தமிழக மாணவர் கழகம் மூலம் சமூக மாற்றத்துடன் கூடிய அரசியல் சீர்திருத்தம் கொள்வதே நமது இலட்சியம். தினமும் தங்களுடன் என் கருத்துக்களை பகிந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

நன்றி

அவனி மாடசாமி - தலைவர்

தமிழக மாணவர் கழகம்

tamilagamtimes@post.com

மதுவும் - மனித வளமும்



நண்பர்களே,

ஒரு இயந்திரம் தயார் செய்ய அதன் தொழில்நுட்பத்தை பொறுத்து நமக்கு சில ஆண்டுகள் ஆகும். ஆனால் , முழுமையான ஒரு மனிதன் தயாராக 20 ஆண்டுகள் ஆகும். ஆனால் அத்தகைய மனித வளம் நம்மிடத்தில் 120 கோடி இருக்கிறது. அத்தகைய வளமான மனித சக்தியை நாம் எப்படி வீணடிக்கிறோம் என்பதற்கு ஒரு உதாரணம்தான் நமது மது கொள்கை.

குடியின் வரலாற்றில் முக்கியமான பெயர் வில்லியம் டங்கன் சில்க்வர்த். குடியை ஒரு தனிமனிதனின் பழக்கமாக மட்டும்தான் சமூகம் பார்த்துக்கொண்டிருந்தது. தன்னுடைய பலவீனம் காரணமாக, தன்னுடைய விருப்பம் காரணமாக அவன் அதை கடைப்பிடிக்கிறான் என்றார்கள். அவனை உபதேசித்தும் கண்டித்தும் திருத்த முயன்றார்கள். மதம் சார்ந்தும் சமூகச்சட்டங்கள் சார்ந்தும் அவனை கட்டுப்படுத்தினார்கள். தண்டித்தார்கள்.

சில்க்வர்த் அதை ஒரு நோய் என்று விளக்கிய முன்னோடியான அறிஞர். குடிகாரர் ஒரு நோயாளி, குடிநோயாளி. அதை முதலில் அவர் உணரவேண்டும். அது தன்னுடைய வாழ்க்கைமுறை அல்ல, தன் பிடியில் நிற்கக்கூடிய ஒரு பழக்கம் அல்ல என்று அவர் அறிய வேண்டும். ’சாயங்காலமானால் எனக்கு கைகால்கள் உதறும், கொஞ்சம் குளிரும், இது என்னுடைய பழக்கம், நினைத்தால் நிறுத்திக்கொள்வேன்’ என்று மலேரியா நோயாளி சொல்வதைபோன்றது நம்முடைய குடிகாரர்கள் பலர் குடியைப்பற்றிச் சொல்வது.

குடிகாரரை ஒரு நோயால் பீடிக்கப்பட்டவர் என அவரது சுற்றமும் சமூகமும் உணரவேண்டும். குணமாவதற்கு மிகமிகக் கஷ்டமான நோய். பலவிதமான உட்சிக்கல்கள் கொண்ட நோய். அந்த நோயில் இருந்து அவர் நினைக்காத வரை மீளமுடியாது. அவரை அவரே மீட்டுக்கொள்ள அவரது சுற்றமும் சமூகமும் உதவவேண்டும். குடிநோயாளிகளில் முழுமையாக மீளக்கூடியவர்கள் ஐந்து சதவீதம்கூட கிடையாது. [குடும்ப பாசம் உறுதியாக இருப்பதனால், இந்த விகிதம் இந்தியாவில் கொஞ்சம் அதிகம் என்கிறார்கள்].

குடி ஒரு நோய் என்ற எண்ணத்தை உருவாக்குவதில் சில்க்வர்த் அவர்கள் ஆற்றிய பெரும்பங்கு இன்று மருத்துவ அறிவியலில் ஒரு வரலாற்று திருப்புமுனையாக கருதப்படுகிறது. சில்க்வர்த் அவர்களால் மீட்கப்பட்ட பில் வில்சன் என்ற குடிநோயாளியால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் இந்த ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ். அந்த மருத்துவமேதையை இன்று நன்றியுடன் நினைத்துக்கொள்வோம்.


பில் வில்சன், நிறுவனர் ஆல்ஹகாலிக்ஸ்அனானிமஸ்

குடி பற்றிய ஆய்வுகளில் மிகச்சமீபமாக நிகழ்ந்துள்ள பாய்ச்சல் என்பது குடிக்கு அடிமைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பாரம்பரியமாகவே வருகின்றன என்பதுதான். அவை நம் மரபணுக்கூறுகளிலேயே உள்ளன. நாம் குடிக்கும் சாராயத்தை நம் மூளைக்குள் இருந்து எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான வேதிப்பொருள் உள்ளது. டெட்ரோ ஹைட்ரோடைஸோ குயிலோன் [TIQ] . டி.ஐ.க்யூநம் மூளைக்குள் இருக்கும் இந்த ரசாயனம் சாராயத்தை பெற்றுக்கொண்டதும் செயல்பட ஆரம்பிக்கிறது. படிப்படியாக அது மூளையின் பிற ரசாயனங்களை வேலைசெய்யாமலாக்குகிறது. ஆச்சரியம் என்னவென்றால் டி.ஐ.க்யூ மூளையின் பிற ரசாயனங்கள் செய்யும் வேலையை முழுக்க தானும் செய்ய ஆரம்பிக்கிறது.

சென்ற பல ஆண்டுகளில் டி.ஐ.க்யூ பற்றி நிறையவே ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஒவ்வொன்றும் மிக சிக்கலான பதில்களையே கொடுத்துள்ளன. டி.ஐ.க்யூ-க்கு பதிலாக பல ரசாயனங்களை கண்டுபிடித்தார்கள். அவற்றை கொடுத்து குடிநோயாளிகளை மீட்க முடியுமா என்று பார்த்தார்கள். அவை ஒவ்வொன்றும் மூளைக்குள் டி.ஐ.க்யூ செய்யும் அதே வேலையைத்தான் செய்தன. குடியை விட்டு அந்த மாத்திரைகளுக்கு நோயாளியை அடிமையாக ஆக்கின அவை.

டி.ஐ.க்யூ வின் அளவும் தீவிரமும் எல்லாம் பெரும்பாலும் மரபுரிமையாக கிடைக்கக்கூடியவை என்கிறார்கள். ஒப்பீட்டளவில் மஞ்சள் இனம் டி.ஐ.க்யூ வின் தீவிரம் குறைவானது என்கிறார்கள். சில இனக்குழுக்களும் இந்த ரசாயனத்தின் வீரியம் அதிகம் சிலரிடம் இல்லை என்கிறார்கள். எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். தட்பவெப்பநிலை. ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்ந்து வாழ்ந்து உருவாகக்கூடிய இயல்புகள். அவை தலைமுறைகளாக கைமாறப்படுகின்றன.

டி.ஐ.க்யூ நம் மூளைக்குள் நமக்கே தெரியாமல் இருக்கும் ஒரு அபாயம். இங்கே நிற்கும் நான் இன்றுவரை குடித்ததில்லை. ஆனால் ஒருவேளை என் தலைக்குள் அந்த பூதம் காத்துக்கொண்டிருக்கலாம். முதல் கோப்பைக்காக. பாலைவனத்தில் வெட்டுக்கிளிகளின் முட்டைகள் ஆயிரம் வருடம் கிடக்கும். ஒரே ஒரு மழை பெய்ததும் பிலுபிலுவென கிளம்பி தேசங்களையே தின்று மொட்டையாக்கிவிடும். அதைப்போல.

சிலநாட்களுக்கு முன்னர் ஒரு விவாதம். ஒருவர் சொன்னார், சாதிப்புத்தி என்று உண்டா என்று. வழக்கமாக வசையாகவே அதை பயன்படுத்துவோம். ஆனால் நடைமுறையில் அப்படி ஒன்று நம் வாழ்க்கையில் ஏதேனும் பங்களிப்பாற்றுகிறதா? நான் இன்று சாதிக்குள் மணம் புரிந்து வாழக்கூடியவன் அல்ல. ஆனால் ஒரு சாதிக்குள் நான் பிறந்திருக்கிறேனே, அது எனக்கு எதையாவது கொடுத்ததா? நான் என்னையே கூர்ந்து பார்த்துக்கொள்கிறேன்.

என்னுடைய சாதி போரிடும் சாதி. யாருக்காகவோ யாரிடமோ போரிட்டு கொல்லவும் சாகவும் நூற்றாண்டுகளாக பயிற்றுவிக்கப்பட்டது இது. அந்த செயலைச்செய்வதற்குண்டான மனநிலைகள் இந்தசாதிக்கு தலைமுறைதலைமுறையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. குடும்பச்சூழலில் அந்த உணர்ச்சிகளும் நம்பிக்கைகளும் மூளைக்குள் ஏற்றப்பட்டுள்ளன. குலதெய்வங்கள் வழியாக குல ஆசாரங்கள் வழியாக அந்த மனநிலைகள் உள்ளே செலுத்தப்பட்டிருக்கின்றன. பண்டிகை அன்று சர்க்கரைப்பொங்கல் வைப்பவர்களுக்கும் ஆட்டின் கழுத்தை வெட்டி துடிக்கத்துடிக்க கொட்டும் ரத்தத்தை சட்டியில் பிடித்துவந்து பொரியல் வைத்து சாப்பிடுபவர்களுக்கும் அடிப்படை மனநிலைகள் வேறுவேறுதான் இல்லையா?

அந்த மனநிலை பற்பல தலைமுறைகள் தாண்டும்போது மரபுக்குணமாக மாறுமா? மாறும் என்றேநான் நினைக்கிறேன். மரபணுப்பண்புகளில் அடிப்படை உடற்கூறுகளாக , நிறமாக வடிவமாக, ஆகக்கூடியவை பல தலைமுறைகள் வழியாக பரிணாமம் ஆகக்கூடியவை. ஆனால் சில தலைமுறைகளுக்குள்ளாகவே பரிணாமம் பெற்று கைமாறப்படும் சில மரபுக்குணங்களும் உண்டு என்று சொல்லப்படுகிறது. நான் என்னை பார்க்கிறேன். உக்கிரமான முன்கோபத்தை நான் என் முன்னோரிடமிருந்து பெற்றிருக்கிறேன். வேல்கம்பை தூக்கிக்கொண்டு போர்க்களம் போன முன்னோர்களின் பண்பு அது. அந்த முன்கோபத்தின் மறுபக்கம் என்றால் மனச்சோர்வு. அவை இரண்டும் இருந்தால் உருவாகக்கூடிய சர்க்கரை நோய்.

இந்தியாவில் பொதுவாக குடிக்கு அடிமைப்படும் தன்மை மிக அதிகம் என்று சொன்னார்கள். இந்த துறையில் இருக்கும் ஒரு நண்பர் சொன்னார், பொதுவான கணிப்புகளின்படி போர்த்தொழிலை மரபாகக் கொண்ட சாதியினரில்தான் குடி அடிமைகள் மிக அதிகம் என்றார். ஆம், நானும் என் வாழ்நாள் முழுக்க இந்த பாரம்பரியப்பண்புகளுடன்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். இவற்றில் இருந்து என்னை மீட்டுக்கொள்ள என் முழு கல்வியையும் பண்பையும் நான் செலவிட்டுக்கொண்டிருக்கிறேன். இவற்றுடன் இணையக்கூடிய ஒரு பெரிய பேயை உள்ளே உறக்கத்திலேயே வைத்திருக்கிறேன்.

ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் போன்ற அமைப்புகள் நெடுங்காலம் செய்துவந்த பிரச்சாரம் என்பது ‘குடி அளவு மீறுகிறதா என்று கண்காணியுங்கள்’ என்பதுதான். நான்கு அறிகுறிகள். 1. ஒருநாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்திலே குடிக்கத்தோன்றுகிறதா? 2. எல்லா எண்ணங்களும் எப்படியோ குடியுடன் சம்பந்தப்படுகின்றனவா? 3. தனிமையில் இருக்கையில் குடி நினைவு வருகிறதா 4. அன்றாடச்செயல்களான தூக்கம், மலம்கழித்தல் போன்றவற்றுக்கு குடி தேவைப்படுகிறதா? ஏதேனும் ஒன்றுக்கு ஆம் என்றால் கட்டுப்பாட்டை இழந்துவிட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்

ஆனால் இன்றைக்கு ‘தொடங்கவே செய்யாதீர்கள்’ என்பதுதான் பிரச்சாரமாக இருக்கிறது. ஏனென்றால் இது உங்கள் கையில் இல்லை. உங்களுக்குள் இருக்கும் டி.ஐ.க்யூ என்ன நினைக்கிறது, எங்கே கொண்டுசெல்ல விரும்புகிறது என்று உங்களால் சொல்லமுடியாது.

நண்பர்களே, நான் கேரளத்தை நன்கறிந்தவன். இருபதாண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் கிராமங்கள் முழுக்க நூலகங்கள் இருக்கும். வாசிப்பு ஒரு சமூக இயக்கமாக இருந்தது அங்கே. நடகங்கள் நடக்கும். கலைநிகழச்சிகள் நடக்கும். அரசியல் விவாதங்களும் போராட்டங்களும் நடக்கும். இன்றைய கேரளம் நேர் மாறாக ஆகியிருக்கிறது. வாசிப்பு அழிந்துவிட்டது. கலைகள் அழிந்துவிட்டன. அரசியல் வெறும் கும்பல்கூச்சலாக ஆகிவிட்டது

என்ன நடந்தது? நான் ஒரு முறை அதை மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனிடம் கேட்டேன். ‘குடிதான்’ என்றார். இந்த சரிவுக்கு நேர் எதிரான ஒரு புள்ளி விவரம் உண்டு. கடந்த இருபதாண்டுக்காலத்தில் கேரளத்தில் மதுவகைகளின் விற்பனை எகிறிக்கொண்டே இருக்கிறது. இன்று இந்தியாவிலேயே அதிக மது விற்பனையாகும் மாநிலம் அது.

குடி நம் சமூகத்தில் ஒரு சமூக விலக்கால்தான் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அது பஞ்சமாபாதகங்களில் ஒன்றாக இங்கே நமக்கு சொல்லப்பட்டது. இன்றும் இங்கே குடிகாரன் மேல் சமூக மரியாதை இல்லை. எப்படி சமூகம் குடிப்பவர்களை நடத்துகிறது என்று இங்கே பேசியவர் சொன்னார். அந்த விலக்குதான் நம் சமூகம் குடிக்கு எதிராக வைத்துள்ள பெரிய தடுப்பு. அந்த தடுப்பு கொஞ்சம் கொஞ்சமாக கேரளத்தில் இல்லாமலாகியது. குடிப்பது ஒரு கேளிக்கை, அது பாவம் அல்ல என்றார்கள் அறிவுஜீவிகள். குடிப்பது நாகரீகம். குடிப்பது உயர்குடி பண்பாடு. குடிப்பது மேலைநாட்டு வழக்கம். இப்படி மெல்லமெல்ல அதற்கெதிரான மனத்தடை அகன்றது.

இன்றுகேரளத்தில் கணிசமான வீடுகளில் விருந்தினர்களுக்கு மதுகொடுத்து உபசரிக்கும் வழக்கம் உள்ளது. வீட்டு உறுப்பினர்கள் அமர்ந்து குடிப்பது சாதாரணமாக உள்ளது. பெண்கள் குடிக்க ஆரம்பிதிருக்கிறார்கள். பீரும் ஒயினும் குடித்தால் தப்பில்லை என்று அவர்களுக்கான நியாயங்கள். திருமணவிழாக்களில் பார்ட்டிகளில் குடி ஒரு கட்டாயமான நிகழ்ச்சி இன்று.

விளைவாக நம்முடைய அந்திகள் நம்மை விட்டு விலகிச்சென்றன. நாம் நம் பகலை முழுக்க விற்றுக்கொண்டிருக்கிறோம். அந்திகள்தான் நமக்குரியவை. நாம் அரசியலையும் இலக்கியத்தையும் கலைகளையும் பேசுவது அந்திகளில்தான். நாம் குடும்பத்துடன் இருப்பது அந்திகளில்தான். நமக்கான நேரம் என்பது அந்திதான். அந்த அந்திகளை குடி களவாடிவிட்டது. இன்றைய கேரளத்தில் மாலை ஆறுமணிக்கு கேரளம் முழுக்க ஒலிக்கும் குரல் ‘வையுந்நேரத்து எந்தா பரிபாடி?’ சாயங்காலம் என்ன புரோக்ராம்? ஆம், குடிதவிர வேறு ஆர்வங்களே இல்லை. அதுவே அங்கே அனைத்து துறைகளிலும் இன்றுகாணும் தேக்கநிலை.

இங்கே தமிழ்நாட்டிலும் அந்த நிலை சென்னையிலும் கோவையிலும் உருவாகி வருகிறது. குடிக்கு எதிரான மனத்தடைகளை நாகரீகம் என்றபேரில் உடைத்து தள்ளுகிறார்கள். சனிக்கிழமைச்சாயங்காலங்களில் குடிக்காதவன் அன்னியனாக ஆகும் சூழல் உருவாகி வருகிறது. குடிக்காதவர்கள் நண்பர்கள் மத்தியில் வேலைசெய்யுமிடங்களில் எங்கும் தனிமைப்படுகிறார்கள். கட்டுப்பெட்டி என்றும் கோழை என்றும் கேலிசெய்யபப்டுகிறார்கள். ஆகவே தன்னை தக்கவைத்துக்கொள்ளவே குடிக்கவேண்டிய நிலைக்கு ஆணும் பெண்ணும் தள்ளப்படுகிறார்கள்.

இன்று குடிக்கு எதிரான சமூகத்தடைகள் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. குடி பாவம் என்றால் இன்று எவரும் கேட்கப்போவதில்லை. குடியைப்பற்றி இன்றைய அறிவியல், நவீன மருத்துவம், என்ன சொல்கிறது என்று எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. ஆல்ஹகாலிக்ஸ் அனானிமஸ் போன்ற அமைப்புகளின் பங்களிப்பு இன்னமும் பலமடங்கு அதிகரிக்க வேண்டியிருக்கிறது

டேவிட் அட்டன்பரோவின் ஒரு இயற்கைப்படத்தில் ஒரு காட்சியை கண்டேன். ஒரு பூச்சுயிரி [ஃபங்கஸ்] எப்படி இனபெருக்கம் செய்கிறது என்று. அது ஒரு எறும்பின் காலில் ஒட்டிக்கொள்கிறது. சட்டென்று மூளைக்குள் செல்கிறது. உடனே அந்த எறும்புக்கு திரும்பி தன்கூட்டுக்கு செல்லவேண்டும் என்று தோன்றுகிறது. கூட்டுக்குள் சென்று மற்ற அத்தனை எறும்புகளுக்கும் அந்த பூச்சுயிரியை அது பரப்புகிறது. பாதிக்கப்பட்ட அத்தனை எறும்புகளின் மூளைக்குள்ளும் சென்று அமர்ந்துகொண்டு அந்த பூச்சுரியி நேராக வெளியே செல்ல சொல்கிறது

எறும்புகள் வெளியே போய் புல்நுனிகளில் ஒட்டிக்கொண்டு காத்திருக்கின்றன. காலையில் மேயவரும் மாடுகளின் வயிற்றுக்குள் செல்வதற்காக. அந்த மாடுகளின் வயிற்றுக்குள் போய் அந்த பூச்சுயிரி இனப்பெருக்கம் செய்கிறது. சாணி வழியாக திரும்பவும் வந்து காட்டில்பரவுகிறது.

தன்னுடைய இனபெருக்கத்திட்டத்துக்காக அந்த எறும்புகளை அந்த பூச்சுயிரி பயன்படுத்திக்கொள்கிறது. எறும்புகளின் சிந்தனைகளையும் செயல்க்ளையும் அது கட்டுப்படுத்துகிறது. சாதாரணமான ஒரு ஃபங்கஸ். மனமோ சிந்தனையோ இல்லாத சாதாரணமான ஒரு உயிர்பூச்சுதான் அது. அந்த எறும்புகள் வரிசையாக புல்நுனியில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். ஏதோ சாபம் பெற்ற உயிர்களைப்போல. அந்த எறும்பு ஒன்றை கூப்பிட்டு ’நீ ஏன் இங்கே இருக்கிறாய்?’ என்று கேட்டால் ’என் சொந்த விருப்பப்படி வந்து அமர்ந்திருக்கிறேன். இதுதான் கேளிக்கை. இதுதான் நாகரீகம்’ என்றுதான் சொல்லும் இல்லையா?

நண்பர்களே மது என்பது மிகச்சாதாரணமான ஒரு ரசாயனப்பொருள். வயிற்றுக்குள் போனதும் அசிடால் டிஹைட்ரேடாகவும் அசிட்டிக் அமிலமாகவும் மாறக்கூடியது. ஆனால் அது நம் முளைக்குள் போய் நம் எண்ணங்களை ஆட்டிப்படைக்க கூடியது. நம் சிந்தனைகளை கட்டுப்படுத்தக்கூடியது. அது நம்முடைய பானம் அல்ல, நம் மூளைக்குள் இருக்கும் டி.ஐ.க்யூ என்ற பேயின் பானம் அது.
நாம் போராடிக்கொண்டிருப்பது அந்த தீய சக்திக்கு எதிராக. அந்த போராட்டத்தை நடத்தக்கூடிய, அதை வென்று மீண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அவனி மாடசாமி - தலைவர்
தமிழக மாணவர் கழகம்
tamilagamtimes@post.com

பனி பெய்து குளம் நிறையுமா ?

பனி பெய்து குளம் நிறையுமா ?

'சம கால தேவைகளும் - தீர்க்கமான சிந்தனை திறன்களும் இணைந்துதான் நிறைவான - நிலையான சமூக / அரசியல் தீர்வு சமன்பாடுகளை எட்ட இயலும்.' வின்ஸ்டன் சர்ச்சலின் சிந்தனை துளி . இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் , அரசியல் சுதந்திரம் அடைவதன் சமகால அவசியமும் - நம் புவியியல் சார்ந்த பண்பாடும் , நாகரீக பரிணாம வளர்ச்சியும் கொண்ட நம் இன மக்கள் கொண்டே நாம் நம் அரசியல் நிர்ணய சபைகளை நிறுவ வேண்டும் என்ற தீர்க்கமான சிந்தனை திறன் கொண்ட தலைவர்களும் இணைந்துதான் இந்திய அரசியல் சுதந்திர போராட்டம் வரலாற்று பதிவு பெற்றது.
சமகால தேவையான தூய்மையான அரசியல் சூழலை உருவாக்க, நம் தலைநகரில் தற்சமயம் ஆட்சியில் அமர்ந்துள்ள 'அம் ஆத் மி' கட்சி ஆட்சியை எட்டிய வழிமுறையை நம் இணையம் அரசியல் ஆய்வு பார்வையோடு அலசுகிறது.
கால்பந்தாட்டத்தில், ஒரு அணி வீரர்கள் அனைவரும் பந்தை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு செல்ல போராடினாலும் , ஒரு வீரர் மட்டுமே கோல் போட முடியும். அவர் மட்டுமே முன்னிலை பெறுவார். அந்த வகையில் தலைநகரில் அன்னா ஹசாரேவோடு எத்தனையோ இயக்கங்கள் சேர்ந்து போராடினாலும் , அர்விந்த் கெஜ்ரிவால் மட்டுமே முன்னிலை பெற்றார்.
போதிய கால அவகாசம் இல்லாமல் ஒரு ஆட்சியை அரசியல் ஆய்வு செய்தால் , அந்த ஆய்வின் அடிப்படை நியாயங்கள் சந்தேகிக்கப்படலாம். ஆனால், ஆட்சியில் அமர்ந்தவுடன் அந்த கட்சியின் தலைவரும் - டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றிய சில தீர்மானங்கள் நம்மை சிந்திக்க வைத்தது.
'ஆட்சி மாற்றமும் - மக்கள் வாழ்வில் ஏற்றமும்' என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தார்கள். லோக்பால் சட்டம் - லோக் ஆயுக்தா - ஊழல் ஒழிப்பு... என அவர்கள் அறிவிப்புகள் நீள்கிறது.

இந்திய இராணுவ பயிற்சியில், அதிகாலையில் உடற்பயிற்சி செய்ய வரும் பயிற்சி வீரர்கள், சுத்தம் செய்து - வெள்ளை பாலீஷ் செய்யப்பட்ட விளையாட்டு காலணிகளை அணிந்து வரவேண்டும் என்பது இராணுவ விதி. ஆனால், பயிற்சியின் அடிப்படை புரியாத வீரர்கள் காலணிகளை சுத்தம் செய்யாமல் வெறும் வெள்ளை நிற பாலீஷ் மட்டும் காலணியில் இட்டு - சுத்தம் செய்தது போல் காட்டியிருப்பார்கள். காலணியை சுத்தம் செய்யாமல் வெறும் வெள்ளை பாலீஷ் மட்டும் இடுவதால் ஆரோக்கியமான சுகாதாரம் கிடைக்காது என்பதை அறிந்திராதவர்கள் செய்யும் தவறு இது.
அடிப்படை காரணிகளை ஆராயாமல் கூறப்படும் தீர்வுகள் பலனளிக்காது அல்லவா ?

அண்மையில் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்த ஒரு ஆணை இப்படித்தான் நம்மை சிந்திக்க வைத்தது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பற்றிய தகவல்களை தெரிவிக்க ஒரு தொலைபேசி எண்ணை அறிவித்தார். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு லஞ்சம் பற்றிய புகார் தெரிவித்தால் , அதை விசாரித்து நடவடிக்கை எடுப்பார்களாம்.

ஆயிரம் பேர் மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமத்திற்கு , ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு லாரி குடிநீர் அரசாங்கம் விநியோகம் செய்கிறது என வைத்துக்கொள்வோம். ஒரு நபருக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டும் கிடைக்கும். இந்த அளவு போதாது என நினைக்கும் ஒரு குடிமகன் தனது நியாயமான தேவையை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி தண்ணீர் கூடுதல் பெறலாம் அல்லது அந்த லாரியின் ஒட்டுநரிடம் பணம் கொடுத்து மற்றவர்களுக்கு சேர வேண்டிய தண்ணீரையும் தனக்கே வந்து சேருமாறு செய்யலாம். இந்த இடத்தில் லஞ்சம் வாங்கும் / கொடுக்கும் சூழல் உருவாக காரணம் என்ன என ஆராயமல் , லஞ்சம் பெறும் நபரை பற்றி அரசாங்கத்திடம் புகார் கொடுங்கள் என அறிவித்தால், லஞ்சம் தீருமா என்பதுதான் ஆய்வு பார்வை.
டில்லியில் காந்திய வழியில் அறப்போராட்டம் செய்த அன்னா ஹசாரேவை முன்னிலைப்படுத்தி , தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி ஆட்சியை பிடித்தார் அ.கெஜ்ரிவால். .
ஆனால், அதே டெல்லியில் 1985 - ல் , ஒரு தென்னிந்திய இளைஞர் தன் 16 -வது வயதில், டில்லி 'தீன் தயாள் உபாத்யா மார்க்கில்' காந்திய சிந்தனைகளோடும் - நேர்மறை எண்ணங்களோடும் தன் பேச்சாற்றலால் பரிசு பெற்றார். அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த திரு. அவனி மாடசாமி. அன்று அங்கு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்பு ' இன்றைய அரசியல் சூழலில் காந்தி உயிருடன் இருந்தால் என்ன செய்வார் ? வந்திருந்தவர்களில் இவர் மட்டுமே நேர்மறை சிந்தனைகளோடு பேசி பரிசு பெற்றார்.
வெறும் பேச்சாற்றலால் கருத்து பிரியர்களை மட்டுமே உருவாக்குவதில் உடன்பாடில்லாததால் தன் 13 வது வயதில் பொது வாழ்வில் ஈடுபட்ட இவர் 1987 - ல் 'தமிழக மாணவர் கழகம்' என்ற அமைப்பினை உருவாக்கி, அதன் மூலம் களப் பணியாளர்களை உருவாக்கினார்.
புரட்சி வீரர் சேகுவாரா , தன்னை அடைத்து வைத்திருந்த பள்ளிக் கூடத்தை தூய்மை செய்யும் பணியை தன்னுடைய இறுதி ஆசையாக கேட்டு செய்து முடித்தார். இது போன்ற இலட்சியத்தை நோக்கங்களாக கொண்ட 'தமிழக மாணவர் கழகம் ' மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி - சாலை வசதி - பள்ளி சீரமைப்பு - பேருந்து வசதி இவைகளை பெற்றுத் தர மாணவர்களை களமிறக்கி போராட செய்தது குறிப்பிடத்தக்கது.
சமுதாய மாற்றங்களினால் மட்டுமே தூய்மையான அரசியல் சூழலை உருவாக்க இயலும் என்ற கோட்பாடினால் அவர் தொடந்து 1993 - ல் மதுரையில் ' மதுரை இலக்கிய மன்றம்' என்ற அமைப்பினை உருவாக்கினார். இதன் மூலம் சமுதாய சிந்தனைகளை பட்டி மன்ற வடிவில் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரப்புரை செய்தார்.

1995 -ல் திரு. சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது , மதுரையில் திரு. அவனி மாடசாமி நடத்திய பட்டி மன்றத்தின் தலைப்பு ' தேர்தல் முறைகேடுகள் பெருக காரணம் பொது மக்களா ? அரசியல்வாதிகளா ? '. 20 வருடங்களுக்கும் மேல் சமகால - சமுதாய சிந்தனைகளை பல்வேறு தலைப்புகள் கொண்டு , பட்டி மன்றங்கள் மூலம் தமிழகமெங்கும் பரப்புரை செய்கிறார். அவருக்கு உறு துணையாக மதுரை இலக்கிய மன்றத்தில் , சிந்தனை வளமும் - பேச்சாற்றலும் கொண்ட வழக்கறிஞர் கண்ணன், புலவர் மு. சோமன் , பேராசிரியரும் - வரலாற்று புதின எழுத்தாளருமான மு. பெர்னாட்சா போன்றவர்கள் உறுதுணையாக களத்தில் நின்று வருகிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் ஒரு காவல் துறை உயர் அதிகாரி அவனி மாடசாமியை பற்றி பேசும்போது கூறினார், " தம்பி, நீங்கள் உங்கள் உழைப்பிற்கும் , சிந்தனை ஆற்றலுக்கும் நீங்கள் அரசியலில் அடைய வேண்டிய நிலையே வேறு. ஏன் உங்களால் இது வரை முடியவில்லை' எனக் கேட்டார். அதற்கு , ' எனக்கு அந்த தகுதி இல்லை . தனி மனித துதியும் , சமூக விரோதிகளின் கூட்டோடு செய்யும் தந்திரங்களும்தான் இன்றைய அரசியலில் முன்னேறுவதற்கான தகுதிகளாக பெரும்பாலும் கருதப்படுகிறது. எனக்கு அந்த தகுதி இல்லை ' என்றார்.

சமீபத்தில் மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நீதிபதி ஒருவர் உரையாற்றும்போது தனது உரையில் , "தம்பி அவனி மாடசாமி போன்றோர்கள் மாணவர் பருவத்திலேயே மக்கள் தலைவராக திகழ்ந்தவர். அவர் அடைந்திருக்க வேண்டிய உயரத்தை இன்னும் எட்டவில்லைதான், எனினும் இந்த சாதி கட்டுமான - வர்க்க போராட்டம் நிறைந்த சமுதாய களத்தில் இன்னும் தன்னம்பிக்கையோடு உழைத்து மக்கள் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது " என்றார்.

2010 - ஆம் ஆண்டு ZEE தமிழ் தொலைகாட்சி மூலம் கல்லூரி இளைஞர்களுக்கான ஒரு நிகழ்ச்சி தயாரித்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியின் பெயர் ' ஞாயிறு பட்டி மன்றம் ' . இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டிலுள்ள பெரும்பான்மையான கல்லூரி மாணவர்கள் பங்கெடுத்தனர். இளைஞர்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் மேடையாக ஆக்கியதை பாராட்டி 2012 ஆம் ஆண்டு 'தினத்தந்தி ' நாளிதழின் வருட மலரில் 'எட்ட இருந்த பட்டி மன்றங்களை , மக்களின் கிட்டே வரச் செய்த மாற்றத்தை தந்த நிகழ்ச்சி என எழுதியது.

அதே ஆண்டிலிருந்து அவர் இணைய தளம் மூலமும் தன் கருத்துக்களை கூற ஆரம்பித்தார். www.tamilagamtimes.com இணைய தள ஆசிரியராக இருந்து தன் கருத்துக்களை பதிவு செய்தார். இணையம் மூலம் அவர் கருத்துக்கள் தமிழர்கள் வாழும் 11 நாடுகளில் சென்றடைந்திருக்கிறது.

சமுதாய சிந்தனைகளோடு கூடிய களப்பணியில் இவர் தன் பொது வாழ்க்கையில் கால் நூற்றாண்டுக்கும் ( 32 ஆண்டுகள் ) மேலான காலங்களை கடந்து வந்துள்ளார்.
இவரை போன்ற அறவழி செயற்பாட்டாளர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என கல்லூரி மாணவர்களும் - பொதுமக்களும் விரும்புகிறார்கள்.
பனி பெய்து குளம் நிறையாது என்பதால் , அவனி மாடசாமி போன்றவர்களின் ஆற்றல் எனும் அறமழை பெய்து சமுதாய - அரசியல் க(கு)ளங்கள் நிரம்பட்டும்.
திரு. அவனி மாடசாமி அவர்களை அரசியல் களத்திற்கு வரவேற்க எழுதுங்கள் : editor@tamilagamtimes.com

கட்டுரையாளர்- தாமிரபரணி