Saturday, 25 January 2014

உட்கட்சி ஜனநாயகமும் - உடல் உறுப்புகளும்

அடிக்கடி தொலைக்காட்சிகளிலும் - செய்தி தாள்களிலும் அரசியல் தலைவர்களும் குறிப்பிடும் ஒரு வார்த்தை ' உட்கட்சி ஜனநாயகம் '. அவரவர் கட்சிகளில் தாம் பின்பற்றுவதாகவும் , மற்ற கட்சிகளில் அது இல்லை என்றும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டுவதையும் காணலாம்.
சரி உட்கட்சி ஜனநாயகம் இருப்பதால் பொது மக்களுக்கு என்ன பயன் ? அது இல்லாவிட்டால் நமக்கு என்ன ? என தோன்றும்.

உதாரணமாக, நம் உடலிலுள்ள பாகங்கள் அதனதன் வேலையை , அதனதன் இடத்திலிருந்து கொண்டு செயலாற்றினால் நம் உடல் ஆரோக்கியமாக இயங்கும். மாறாக , நம் உடல் பாகங்களுக்கு கெடுதல் செய்யும் உணவையோ - திரவங்களையோ உட்கொண்டால், உறுப்புகளின் ஒருங்கிணைந்த ஆற்றல் கிட்டாமல் உடல் ஆரோக்கியம் கெடும்.

ஆரோக்கியம் இல்லாத உடலால் - குறிக்கோளோடு இயங்கும் சிந்தனைக்கு ஒத்துழைக்க இயலாது. ஒருங்கிணைந்த உடல் ஆற்றல் இல்லாத ஒருவரால் பயனுடைய இலக்கை அடையும் உழைப்பு திறன் அளிக்க இயலாது. இதை உடலுறுப்பு ஜனநாயகம் என்று கூட வைத்து கொள்ளலாம்.

அதைப் போன்றதுதான் ஒரு கட்சியை நிர்வகிக்கும் குழுவில் உள்ளவர்கள் அவரவர் திறனுக்கும் - அனுபவ ஞானத்திற்கும் உரிய பதவி நிலைகளை அடைவது. பிழையான பிரதிநிதித்துவ கட்டமைப்பு கொண்ட கட்சியில் , கொள்கை குறிக்கோளுடன் இலக்கை அடையும் திறன் இல்லாமல் , வெறும் மேடைப் பேச்சு பிரசங்கங்களும் - மலிவான தேர்தல் வெற்றி உத்திகளும் கொண்டுதான் கட்சி நடத்த இயலும்.

அரசியல் கட்சிகளால் இயங்கும் நம் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பிற்கு - உட்கட்சி ஜனநாயகம் அற்ற ஆரோக்கியமில்லாத கட்சிகளால் நிர்வகிக்கப்படும்போது ஆபத்து ஏற்படுமல்லவா ? ஆபத்தான ஜனநாயக முறையில் இயங்கும் ஒரு தேசத்தினால் முறையான முன்னேற்றம் எட்ட இயலாது.

பிழையற்ற பிரதிநிதித்துவமும் - உட்கட்சி ஜனநாயகமும் உடைய இயக்கங்களை ஜனநாயக கட்டமைப்புக்கு அழைப்பது நம் கடமை அல்லவா?

நண்பர்களே தொடர்ந்து சிந்திப்போம்.


அவனி மாடசாமி - தலைவர்

தமிழக மாணவர் கழகம்

tamilagamtimes@post.com
www.tamilagamtimes.com

No comments:

Post a Comment